ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோடியில் ஒருவன்.தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு அரசியல் படம்.
சமீப கால அரசியல் படங்களில் ஏழைகளின் குடியிருப்புதான் கதையின் மையக் கருவாக உள்ளது. அது போலவே இந்தப் படத்திலும் அதுவே மையக் கரு. கடந்த வாரம்தான் துக்ளக் தர்பார் என்ற இதே சாயலில் ஒரு அரசியல் படத்தைப் பார்த்தோம்.
என்ன கதை
இந்தப் படத்திலும் ஒரு மாவட்டத் தலைவருக்கும், ஒரு சாதாரண இளைஞனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் மோதலைத்தான் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்.
தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார்.
இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
என்ன பண்ணியிருக்காங்க
கம்பம் அருகில் உள்ள ஒரு மலைக் கிராமத்திலிருந்து அம்மாவின் ஆசைப்படி ஐஏஎஸ் படிக்க சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. சோழிங்கநல்லூரில் உள்ள ஏழைகளின் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்து தங்குகிறார். அங்கு படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு டியுஷன் எடுக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பகுதி கவுன்சிலரை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு கவுன்சிலர் தேர்தலில் அவரை எதிர்த்தே போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார். மாவட்டத் தலைவரான ராமச்சந்திர ராஜுவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல். தனது வார்டை சிறந்த வார்டாக மாற்றுகிறார் விஜய் ஆண்டனி.
ஆனால், அவரை அந்த கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கிறார் ராமச்சந்திர ராஜு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.
என்ன சொல்றாங்க
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் ஒருவர் அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரணமல்ல. அதற்காக எப்படிப்பட்ட அரசியல்வாதிகளை, அரசியலை சமாளிக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
ஐஏஎஸ் படிப்பதற்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி, கலெக்டர் ஆகி ஏதோ செய்வார் என்று எதிர்பார்த்தால் அவரை கவுன்சிலர் ஆக்கிவிடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் சரி செய்திருந்தால் ஆயிரத்தில் ஒரு சிறந்த அரசியல் படம் ஆகியிருக்கும்.
0 கருத்துகள்