சென்னை: நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சீதா குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்தில் உணர்ச்சிகரமான பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். சீதாவைப் பிரிந்த பிறகு ஏன் வேறு யாருக்கும் மனைவி என்ற அந்தஸ்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
சினிமா துறையில் விவாகரத்து செய்திகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பார்த்திபன் மற்றும் சீதா ஜோடி. 'புதிய பாதை' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்ட இவர்கள், திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். மூத்த மகளும், மருமகனும் கூட திரையுலகில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் என்று பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மகளுக்கு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடிகை சீதாவுக்கு பல ஆண்டுகளாக உறுதுணையாக இருந்த அவரது தாயார் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
அதனை தொடர்ந்து சீதா தனது தாயார் குறித்த உருக்கமான நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை சீதா குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தங்களின் விவாகரத்து குறித்து பிள்ளைகளிடம் இதுவரை பேசியது இல்லை என்றும், மூன்று பிள்ளைகளுக்கும் அம்மாவையும் அப்பாவையும் சமமாக பிடிக்கும் என்றும் கூறினார்.
பொதுவாக விவாகரத்துக்குப் பிறகு பல தம்பதிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வார்கள். ஆனால், தாங்கள் இருவரும் அப்படி செய்யவில்லை என்று பார்த்திபன் தெரிவித்தார்.
சமீபத்தில் சீதாவின் தாயார் இறந்தபோது இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை தானே முன்னின்று செய்ததாகவும், மறுநாள் சீதா தனக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று வரை தங்களுக்குள் வருத்தம் இருந்தாலும், முன்பு இருந்த அதே மரியாதையும் அன்பும் அப்படியே இருப்பதாக பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் கூறினார். காதல் என்பது காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தாலும், சீதாவிற்குரிய மனைவி என்ற இடத்தை இதுவரை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், திருமணமான புதிதில் தனக்கு இருந்த முதிர்ச்சியற்ற தன்மை காரணமாகவே தனது வாழ்க்கை பாதியில் முடிந்தது என்று பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
சீதா மீண்டும் நடிக்கப் போகிறேன் என்று கூறியபோது, இன்றைய முதிர்ச்சியுடன் இருந்திருந்தால், தாராளமாக நடிக்க செல்ல அனுமதித்து ஆதரவு தெரிவித்திருப்பேன் என்றும், ஆனால் அன்று குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியாசமாக யோசித்ததால் தான் பிரிவு நேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
விவாகரத்துக்குப் பிறகும் சீதா தன்னை குறை சொன்னது இல்லை என்றும், அதேபோல் தானும் சீதாவை குறை சொன்னது இல்லை என்றும் பார்த்திபன் தெளிவுபடுத்தினார்.
சிலர் தவறான செய்திகளை எழுதுவதால் மகள் கோபம் அடைந்ததாகவும், ஆனால் தான் சீதாவை எங்கும் தவறாக பேசவில்லை என்று மகளிடம் விளக்கியதாகவும் அவர் கூறினார்.
கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, ஒருவருக்கொருவர் புரிதலும், அடுத்தவர் முன்னேற்றத்தை விரும்பும் மனப்பான்மையும் அவசியம் என்று பார்த்திபன் அந்த பேட்டியில் அழுத்தமாக தெரிவித்தார்.