விஜயலட்சுமி பேட்டியில் கூறியதாவது, "சீமான் கூட நான் 'வாழ்த்துக்கள்' படத்தில் நடித்தேன். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இருந்தே எனக்கும் அவருக்கும் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.
எனக்கு எப்போதும் முருகன் மீது மிகுந்த பக்தி உண்டு. படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் முருகனை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் சீமான், 'உன்னை கோவிலுக்கு போக விடமாட்டேன்' என்று என்னிடம் பேசும்போதே சொன்னார்.
'முருகரை பிறகு தரிசனம் செய்யலாம், முதலில் படப்பிடிப்பில் இருப்பவர்களுடன் நன்றாகப் பழகு' என்றார். அப்போதே எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
அதனால் அவர் இருக்கும் இடத்தில் நான் படப்பிடிப்பில் இருக்க மாட்டேன் என்று கூட சொல்லியிருக்கிறேன்," என்று ஆரம்ப கால முரண்பாடுகளை தெரிவித்தார். தொடர்ந்து தமது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் வந்தபோது சீமானின் உதவியை நாடியதை விவரித்தார்.
"அந்த நேரத்தில் என் அக்கா குடும்பத்தில் ஒரு பிரச்சனை. அக்காவின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தி பலவிதமான தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் நான் சீமானின் உதவியை நாடிச் சென்றேன். அவர் எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்.
என் அம்மா இலங்கைத் தமிழர் என்பதால் சீமானை அம்மாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் அன்பாக பழகினார்கள். அந்த நேரத்தில்தான் எனக்கும் சீமானுக்கும் பழக்கம் ஏற்பட்டது," என்று அவர்களின் உறவு எப்படி மலர்ந்தது என்பதை கூறினார்.
ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக சீமான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த விஜயலட்சுமி, "இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது.
சிறையில் இருந்து பலமுறை என்னிடம் அவர் பேசியிருக்கிறார். அதன் பிறகு மதுரையிலேயே அவர் தங்க வேண்டும் என்பதற்காக அங்கேயே தங்கியிருந்தார். அப்போது நானும் அவருடன் தங்கியிருந்தேன். யார் வந்தாலும் என்னை ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுவார்.
பலருக்கும் நான் வீட்டில் இருப்பதே தெரியாது. அந்த சமயத்தில்தான் இயக்குனர் சேரன் அவர்கள், 'இப்படி இருப்பது சரியில்லை, திருமணம் செய்து கொண்டால்தான் நன்றாக இருக்கும், இல்லை என்றால் தவறாகிவிடும்' என்று அறிவுரை கூறினார்," என்று தெரிவித்தார்.
திருமணம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "அதன் பிறகுதான் நான் சீமானை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். நான், கிறிஸ்தவன்.. கோயிலுக்கு வருவது.. மாலை மாற்றி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறினார்.
கோவிலுக்குள் கூட அவர் வரவில்லை, கடைசியாக காரில் இருந்தபடியே எனக்கும் அவருக்கும் மாலை மாற்றி திருமணம் நடந்தது. இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது.. அப்போது எடுத்த புகைப்படங்களை கூட அவரே வைத்துக்கொண்டார். என்னிடம் அந்த புகைப்படங்களை அவர் தரவில்லை.
அப்போதே அந்த போட்டோவை வாங்கி நான் சேரனிடம் அனுப்பி இருந்தால், இன்று சேரன் எனக்காக பேசி இருப்பார். அதை நான் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று இப்படி ஏமாந்து போயிருக்கிறேன்," என்று திருமண புகைப்பட ஆதாரம் இல்லாததை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்