இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் இயக்கிய கடைசி படமான 'மார்கழி திங்கள்' திரைப்படத்தில் நடித்த நடிகர் மனோஜ் குறித்து சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா, 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும், சிறுவயது முதலே இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது என்று பலமுறை அவரும், அவரது தந்தை பாரதிராஜாவும் கூறியுள்ளனர்.
பாரதிராஜாவே ஒருமுறை, "என் மகனுக்குள் இருந்த திறமையை நான் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவனை நடிகனாக்க நினைத்துவிட்டேன்" என்று வருத்தப்பட்டிருந்தார்.
நடிகர் கார்த்தியும் ஒரு பேட்டியில், தான் சிறு வயதாக இருக்கும்போது பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரே தெருவில் வசித்ததாகவும், அப்போது மனோஜுக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.
பல வருட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த வருடம் மனோஜ் பாரதிராஜா 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்கினார். அதில் தனது தந்தையையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
மனோஜின் கால்களில் இரத்த ஓட்டமே இல்லை
இந்நிலையில், அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சமீபத்தில் மனோஜ் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "நாங்கள் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் மனோஜ் சார், 'என் காலை பாருங்க எவ்வளவு வெளுத்து போயிருக்குன்னு தெரியுதா' என்று சொன்னார்.
நான் பார்த்து அதிர்ச்சியாகி என்ன இப்படி இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு கிட்னி பிரச்சனை இருப்பதாகவும், அதனால் கால்களுக்கு ரத்த ஓட்டமே இல்லாமல் இப்படி இருப்பதாகவும் சொன்னார். உடனே நான், 'ஹாஸ்பிடல்ல போய் பார்த்திருக்கலாமே' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'நான் இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு இப்போதான் ஒரு படத்தை இயக்கிக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்துல ஹாஸ்பிடல் அட்மிஷன்ன்னு ஆகிடுச்சுன்னா படத்தோட நிலைமை என்ன ஆகும்? அதனால இந்த படத்தை முடிச்சுட்டு அடுத்த வேலைய பார்க்கலாம்னு இருக்கேன்' என்று சொன்னார்.
அப்பவே அவர் சரியான ட்ரீட்மென்ட் எடுத்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமை இவ்வளவு மோசமா இருந்திருக்காதோன்னு எனக்கு தோணுது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "மனோஜ் சார பொருத்தவரைக்கும் அவருடைய அப்பா தான் அவருக்கு பெரிய ஹீரோ. அவங்க அப்பான்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல அவருடைய குழந்தைகளுக்கு மனோஜ் சார் தான் ஹீரோ.
ஒரு ஹஸ்பண்ட் மெட்டீரியல் எப்படி இருக்கணுமோ, அதே மாதிரி அவர் இருந்தார். மனைவிக்கு நல்ல கணவராகவும், குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருந்தார்" என்று அந்த நடிகர் உருக்கமாக பேசியிருக்கிறார். மனோஜ் பாரதிராஜாவின் இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது. அவரது கனவுகள் நிறைவேறாமல் போனது வருத்தமளிக்கிறது.