விஜய் சொன்னது உண்மை தான் போல.. டாஸ்மாக் ஊழல்.. செந்தில் பாலாஜி செய்த செயல்.. அதிர வைக்கும் தகவல்கள்..!

தவெக தலைவர் விஜய் பாஜகவும், திமுகவும் நண்பர்கள் தான். சண்டை போடுவது போல நடிக்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியானது. 

இந்நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி திடீர் பயணமாக டெல்லி சென்று அதிகாலையில் சென்னை திரும்பியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. 

தமிழகத்தில் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் நிறுவனம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 

இதன் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலையிலேயே அவர் சென்னை திரும்பி இருக்கிறார். 

டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அவரது இந்த திடீர் பயணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், ஆளுநரின் டெல்லி பயணமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறை சார்ந்த கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இந்த சமயத்தில் டெல்லி சென்றிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

டெல்லியில் அவர் வழக்கறிஞர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை தொடர்ந்து, துரைமுருகனும் ஜெகத்ரட்சகனுடன் டெல்லி சென்று இரவோடு இரவாக சென்னை திரும்பினார். 

தற்போது செந்தில் பாலாஜியும் அதே பாணியை பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அமைச்சரின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.