தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். "துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், செல்வராகவன் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கஸ்தூரி ராஜா இயக்கிய "துள்ளுவதோ இளமை" படத்தின் ஒரு கட்டத்தில் அந்தப் பொறுப்பு செல்வராகவனின் கைகளுக்கு சென்றது. தனது பதின்ம வயதிலேயே எந்தவித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார் செல்வராகவன்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்தன. தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய "காதல் கொண்டேன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படம் தான் நடிகர் தனுஷின் நடிப்புத் திறமையையும், இயக்குநர் செல்வராகவனின் மேதைமையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய பல படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
அவரது படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புவதே அதற்கு சாட்சி. தனிப்பட்ட வாழ்க்கையில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற செல்வராகவன், பின்னர் தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை காதலித்து மணந்தார்.
தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தனது மகளின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவராக செல்வராகவன் திகழ்கிறார். இயக்கத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும், நடிகர் செல்வராகவனின் நடிப்பிற்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
"பீஸ்ட்", "பகாசூரன்", "சாணிக்காயிதம்", "மார்க் ஆண்டனி", "ராயன்" உள்ளிட்ட படங்களில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அதேசமயம் மீண்டும் இயக்குநராகவும் கம்பேக் கொடுக்க அவர் தயாராகி வருகிறார். "ஆயிரத்தில் ஒருவன் 2" படத்தின் அறிவிப்பு வந்தாலும், அடுத்த கட்ட நகர்வுகள் இன்னும் தெரியவில்லை.
தற்போது அவர் "மென்ட்டல் மனதில்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், செல்வராகவன் குறித்து பேசிய கஸ்தூரி ராஜா, "செல்வராகவனை சிலரிடம் உதவி இயக்குநராக சேர்க்க நான் முயற்சி செய்தேன்.
ஆனால் அவர் எனது மகன் என்பதாலேயே அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. வாரிசுகள் கட்டாயமாக சினிமாவுக்கு வந்துதான் ஆக வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் தலையெழுத்து இருந்தால் வந்துதான் ஆக வேண்டும்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
தந்தையின் மகனாக இருந்தும் வாய்ப்புக்காக செல்வராகவன் பட்ட சிரமத்தை கஸ்தூரி ராஜா வெளிப்படுத்தியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு செல்வராகவனே ஒரு உதாரணம் என்பதை இந்த தகவல் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
0 கருத்துகள்