பிக்பாஸ் சீசன் 8 வின்னர் முத்துக்குமரன், தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், பிரபலமான யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் நபராக உயர்ந்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் முத்துக்குமரன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண்களின் உடல் வளைவு குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8வது சீசனின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி பணியாற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே முத்துக்குமரன் தனக்கு கிடைத்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது பேச்சைக் கேட்ட விஜய் சேதுபதியே நெகிழ்ந்து, "இவ்வளவு சிறிய வயதில் பெரிய பாடம் கற்றுத் தந்துள்ளாய்" என்று பாராட்டினார்.
சமீபத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக முத்துக்குமரன் கலந்து கொண்டார். அங்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசிய முத்துக்குமரன், "பெண்ணின் உடல் வளைவு பற்றி தெரியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவரே தொடர்ந்து, "இது எப்படிப்பட்ட கேள்வி தெரியுமா, நான் பேசுவது மிகவும் வக்கிரமானதாக தெரியும், ஆனால், பெண்ணின் வளைவு என்பது புன்னகை தான். பெண்ணின் உடலில் புன்னகை அழகாக வளைந்து செல்லும்" என்று விளக்கமளித்தார்.
முத்துக்குமரனின் இந்த பேச்சுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரித்து கை தட்டினர். ஆனால், முத்துக்குமரனின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கின.
"ஒரு பள்ளி விழாவில் இது போன்ற பொறுப்பற்ற பேச்சு தேவையா?" என்றும், "மாணவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட விஷயங்களை பேசுவதா?" என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். "இதில் என்ன சிரிப்பு இருக்கிறது?" என்று சிலர் கமெண்டுகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், "பள்ளிகளில் மாணவர்களிடம் இப்படித்தான் தமிழ் பற்றை வளர்ப்பதா?" என்றும் பலரும் வினவத் தொடங்கியுள்ளனர். முத்துக்குமரன், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல மேடைகளில் தமிழ் சிறப்புகளை பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தமிழ் மொழியின் பெருமையை பல இடங்களில் எடுத்துரைத்தார். இந்நிலையில், அவர் பள்ளி விழாவில் பேசிய சர்ச்சை பேச்சு, அவர் மீது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ஒரு சிலர் அவரது பேச்சை ரசிக்கும் விதமாக இருந்தாலும், பெரும்பான்மையானோர் இது போன்ற பேச்சுக்கள் பள்ளி மேடைகளில் தவிர்க்கப்பட வேண்டியது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது போன்ற வக்கிரமான கருத்துக்களை பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுவது சரியா? என்றும் விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.
0 கருத்துகள்