கண் சிவக்க பேசிய விஜய் - உடனடி பதிலடி கொடுத்த திமுக


நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில பொதுக்குழு கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். 

குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடிய விஜய், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரடியாக "மன்னராட்சி முதல்வர்" என்று விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய விஜய், "உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று குற்றம் சாட்டினார். 

மேலும், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெயரை வீராப்பாக சொன்னால் போதாது முதல்வர் அவர்களே. அதை உங்கள் ஆட்சியிலும், உங்கள் நிர்வாக திறமையிலும் காட்ட வேண்டும். 

ஆனால் அதை செய்யாமல் சதா சர்வ காலமும் பாஜக அரசு அதை செய்கிறது, இதை செய்கிறது என பூச்சாண்டி காட்டிக் கொண்டு, அதே பாஜக அரசுடன் ஊழல் செய்வதற்காக ரகசிய கூட்டணி வைத்து ஒரு மன்னர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 

மத்தியில் ஆளக்கூடிய பாஜக தான் உங்களுடைய ரகசிய உரிமையாளர்" என்றும் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில், விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவை சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் கூறுகையில், "நடிகர் விஜயின் இந்த பேச்சு அவருடைய அரசியல் அறியாமையை காட்டுகிறது. பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவராக இருக்கிறார் விஜய். திராவிட முன்னேற்ற கழகம் தான் எங்களுடைய எதிரி என கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ பேர் வருகிறார்கள் போகிறார்கள். 

திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் நிலைத்து நிற்கிறது. இன்னும் நூறாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். தன்னை ஒருவர் தலைவர் என்று அழைத்ததும் தலைகால் புரியாமல் பேசுகிறார் விஜய். 

தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டில் அமர்ந்து கொண்டு ஒரு மன்னர் போல செயல்பட்டு கொண்டிருக்கும் விஜய், தளபதி ஸ்டாலின் அவர்களை மன்னார் ஆட்சி செய்கிறார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலில் விஜய்க்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று காட்டமாக பதிலளித்துள்ளார். 

விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இரு தரப்பு கருத்துக்களும் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன. 

2026 சட்டமன்ற தேர்தலில் இந்த மோதல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.