தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள், சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்களும் ரசிகர்களும் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தமிழக அரசின் தலைமை காஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவிற்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, மற்றும் உலர் பழங்கள் உட்பட சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல விஜய் ரசிகர்கள் அதிக அளவில் அங்கு திரண்டனர்.
சரியாக மாலை 5.20 மணிக்கு விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். ரமலான் மாதத்தை முன்னிட்டு விஜய்யும் அன்று நோன்பு இருந்த நிலையில், ஜமாத் நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வெள்ளை கைலி, வெள்ளை சட்டை மற்றும் தொப்பி அணிந்து வந்த விஜயை அங்கிருந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நோன்பு திறப்பதற்கு முன்பு, விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என துவா பிரார்த்தனை செய்யப்பட்டது.
விஜய்யும் கைகளை கூப்பி பிரார்த்தனையில் ஈடுபட்டார். மேலும் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், நோன்பு திறக்கும் விதமாக விஜய் ஜூஸ், பேரிச்சை மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவற்றை எடுத்து நோன்பை நிறைவு செய்தார். அவருடன் இஸ்லாமியர்களும் நோன்பு திறந்தனர்.
விஜய் வருகையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒய்எம்சிஏ மைதானத்திற்குள் 2000 இஸ்லாமிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பிதழ் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், விஜய் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தபோது, அவருடன் புகைப்படம் எடுக்க அனைவரும் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு மேலும் அதிகமானது.
போலீசார் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை கலைத்து ஒரு வழியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியோ அல்லது விஜய்யின் புகைப்படமோ இடம்பெறவில்லை.
கட்சிக் கொடி கட்டிய கார்கள் மற்றும் பிற வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என விஜய் கடுமையான உத்தரவிட்டிருக்கிறார். எந்த இடத்திலும் இது கட்சியின் நிகழ்வாக அடையாளபடுத்தப்பட்டு விடக்கூடாது என்பதாலும் மதம் சார்ந்த விஷயங்களில் கட்சி அடையாளங்கள் கூடவே கூடாது என்றும் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார் விஜய் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்கள் மற்றும் கட்சியினரின் கட்டுப்பாடற்ற வருகை காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும், விஜய் வெற்றிகரமாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு இஸ்லாமிய சமூகத்தினரிடையே வரவேற்பை பெற்றது.
0 கருத்துகள்