தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பாலும், எளிமையான தோற்றத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய அவர். இதை சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை.. நான் 18 வயதில் இருக்கும்போது எனக்கு 23 வயதில் திருமணம் ஆகிவிடும் என்றும், 30 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிடுவேன் என்றும் நினைத்து கொண்டிருந்தேன்.
ஆனால் வாழ்க்கை வேறு பாதையில் சென்றது. சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. ஒரு கட்டத்தில் நாம் திட்டமிட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, வாழ்க்கை நமக்கு என்ன கொடுக்கிறதோ அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்" என்று கூறினார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை திட்டம் குறித்து பேசிய சாய் பல்லவி, எனக்கு இப்போது இருக்கும் ஒரே திட்டம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் நான் என்னை மேம்படுத்திக் கொள்வது தான்.
இன்று நான் எப்படி இருக்கிறேனோ அதை விட அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய அணுகுமுறை, பேச்சு எல்லாவற்றையும் நான் நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
உதாரணமாக, இப்போது நான் எப்படி பேசுகிறேனோ அப்படியே 15 வருடங்கள் கழித்தும் பேசினால் நான் வாழ்க்கையில் ஜெயித்ததாக அர்த்தம் இல்லை. எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், எத்தனை கோடி சம்பாதித்து இருந்தாலும் அது முக்கியம் கிடையாது.
15 வருடம் கழித்து நான் பேசும் போது, எந்த மனநிலையில் பேசுகிறேன், எப்படி பேசுகிறேன் என்பது தான் முக்கியம்.
அதுதான் என்னுடைய உண்மையான வளர்ச்சி. அதை நோக்கி தான் என்னுடைய பயணம் இருக்கிறது என்று மிகவும் ஆழமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
சாய் பல்லவியின் இந்த பேட்டி மூலம், அவர் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக அணுகுவதையும், வெளிப்புற வெற்றிகளை விட சுய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் நம்மால் உணர முடிகிறது.
அவரது இந்த சிந்தனை பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
0 கருத்துகள்